அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், பஹாமாஸில் நடைபெற்ற தனது திருமணத்தையொட்டிய கொண்டாட்டங்களுக்கு நிதியுதவி செய்த ரஷ்ய தொழிலதிபர் உமர் கிரெம்லெவுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் ஜூனியரின் திருமணத்துக்குப் பின்னர் பஹாமாஸில் இரண்டு இரவுகள் நடைபெற்ற கொண்டாட்டங்களுக்கு கிரெம்லெவ் நூறாயிரக்கணக்கான டொலர்கள் செலவிட்டதாக விசாரணை செய்தி ஒன்று தெரிவித்திருந்தது. தனியார் தீவு ஒன்றை வாடகைக்கு எடுத்தது உள்ளிட்ட சில செலவுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், ட்ரம்ப் ஜூனியரின் மனைவி பெட்டினா ட்ரம்ப், இது திருமணத்துக்கான செலவு அல்ல என்றும், திருமணத்துக்குப் பின்னர் வழங்கப்பட்ட ஒரு தாராளமான பரிசு என்றும் விளக்கியுள்ளார்.
கிரெம்லெவ், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தலைவராக உள்ளதுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவர் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர் புடினுடன் சீனாவுக்குச் சென்ற ரஷ்ய பிரதிநிதிக் குழுவிலும் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டு அரசியல் தொடர்புகளைக் கொண்ட ஒருவரிடமிருந்து ட்ரம்ப் ஜூனியர் பெற்றதாகக் கூறப்படும் இத்தகைய விலையுயர்ந்த பரிசு தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதனிடையே, ட்ரம்ப் தனது மகன் பணத்தைத் திருப்பிச் செலுத்தியதாகத் தெரிவித்துள்ள போதிலும், அந்தப் பணம் உண்மையில் செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. ட்ரம்ப் ஜூனியர் பணத்தைத் திருப்பிச் செலுத்தியதாக அவருக்கு எவ்வாறு தெரியும் என்பதையும் ட்ரம்ப் விரிவாக விளக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.









