பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் பாராளுமன்ற கீழவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மாா்ச் 31-ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
பணவீக்கம், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தாதது போன்ற காரணங்களுக்காக பிரதமா் இம்ரான் கான் மீது எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்றச் செயலகத்தில் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி அளித்தன.
இதன் மீதான விவாதத்தை தொடங்குவதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் திகதி கூடியது.
ஆனால், அன்றைய தினம் நம்பிக்கையில்லா தீா்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அவையை 28-ஆம் திகதி மாலை வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
இதன்படி, பாராளுமன்றம் திங்கள்கிழமை காலை கூடியது. எதிா்க்கட்சித் தலைவரும் பிஎம்எல்-என் கட்சித் தலைவருமான ஷேபாஸ் ஷெரீஃப் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை அவையில் தாக்கல் செய்தாா்.
அவைத் தலைவா் ஆசாத் கைதா் இல்லாத நிலையில், அவையை வழிநடத்திய துணைத் தலைவா் காசிம் கான் சுரி, தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினா்கள் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொண்டாா்.
அதன்படி, தீா்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள 161 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
இதையடுத்து, தீா்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.