வடக்கு ஈராக்கில் அமைந்துள்ள பாஷிகா-சில்கான் இராணுவத் தளத்தை ஈராக் மத்திய அரசிடம் படிப்படியாக ஒப்படைக்க துருக்கி ஒப்புக்கொண்டுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ஈராக் பிரதமர் அலி அல்-சைதி ஆகியோருக்கு இடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஈராக்கின் சின்ஜார் பகுதியில் அரச அதிகாரத்தை முழுமையாக நிலைநாட்டுவதற்கும், அங்கு தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு ஆயுதக் குழுக்களின் இருப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இரு நாடுகளும் ஒத்துழைக்க இணங்கியுள்ளன. ஈராக் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படும் நிலையில், ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட நடைமுறை மற்றும் கால அட்டவணைக்கு அமைய துருக்கி தனது படைகளை பாஷிகா-சில்கான் தளத்திலிருந்து படிப்படியாக வாபஸ் பெற்று, தளத்தை ஈராக் மத்திய அரசிடம் ஒப்படைக்கவுள்ளது.
மொசூலுக்கு வடகிழக்கே அமைந்துள்ள பாஷிகாவில் துருக்கி 2015ஆம் ஆண்டு முதல் இராணுவப் பிரசன்னத்தை கொண்டுள்ளது. இந்தப் பிரசன்னம் ஈராக்கின் இறையாண்மையை பாதிப்பதாக பாக்தாத் முன்னதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. புதிய உடன்பாட்டின் கீழ் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்தவும், குறிப்பாக ‘Development Road’ எனப்படும் கூட்டு மூலோபாயத் திட்டத்தை விரைவுபடுத்தவும் இரு நாடுகளும் இணங்கியுள்ளன.









