பாடசாலை விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

-கிளிநொச்சி நிருபர்-

கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பாவனையில் நூறு வருடங்களாக இருந்த விளையாட்டு மைதானத்தை, தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் புதுக்காட்டுச் சந்தி- தாழையடி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கணேசா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் காணியினை பாடசாலை நிர்வாகம் சுமார் 100 வருடங்களாக விளையாட்டு மைதானமாக பாவித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அக் காணியினை பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை நிர்வாகம் தயாராக இருந்தது. அதற்கு காணி உரிமையாளரும் ஒப்புக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அக்காணி தனி நபர் ஒருவருக்கு விற்கப்பட்டதாக தெரிவித்து அங்கு கட்டடம் அமைப்பதற்காக கற்கள், மண் பறிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி அளவில் புதுக்காட்டு சந்தி- தாளையடி பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை பொலிஸார் போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி, பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.