பாடசாலை டெங்கு ஒழிப்பு தினம் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் கிளீன் சிறி லங்கா செயலகம் இணைந்து ஜூலை 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

“கிளீன் சிறி லங்கா டேய்” என்ற பெயரில் பெயரிடப்பட்டுள்ள, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தலைமையில் கல்வி அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நோய் பரவாமல் தடுத்தல், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, பாடசாலை மாணவர்களிடையே சுற்றாடல், சமூக மற்றும் மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு இணையாக இலங்கையிலுள்ள 10,096 பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் ஓவியம், சுவரொட்டிக் கண்காட்சிகள், நாடகம், கலாசார மற்றும் இசையம்சங்கள், விழிப்புணர்வு உரைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், இலங்கைப் பொலிஸ், முப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலகங்கள் ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் நிகழ்ச்சித்திட்டத்தை எதிர்காலத்தில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேலதிக செயலாளர் உதாரா திக்கும்புர, உதவிக் கல்விப் பணிப்பாளர் (பிரிவெனா) வண, கொஹெல்வல விபஸ்ஸீ தேரர்,  கிளீன் சிறி லங்கா செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.