பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரிடம், பாகிஸ்தானின் தேசிய சைபர் குற்ற விசாரணை பிரிவு (NCCIA) லாகூரில் விசாரணை நடத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான பாகிஸ்தானின் சமீபத்திய டெஸ்ட் தொடரின்போது அணியின் உடைமாற்றும் அறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தகவல் கசிவுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரு வீரர்களும் விசாரணை முகமையினால் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை லாகூரின் ஜோஹர் டவுனில் அமைந்துள்ள பாகிஸ்தானின் தேசிய சைபர் குற்ற விசாரணை பிரிவு அலுவலகத்தில் முன்னிலையாகியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தில் இடம்பெற்ற போட்டிகள் மற்றும் பயிற்சி அமர்வுகளின்போது உடைமாற்றும் அறையிலிருந்து தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், அத்துடன் வீரர்களின் தொடர்புகள் மற்றும் சந்திப்புகள் தொடர்பிலும் ரிஸ்வான் மற்றும் இமாம் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு வீரர்களின் கையடக்கத் தொலைபேசிகளும் தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இங்கிலாந்து தொடருக்கு முன்னரும் தொடரின்போதும் இடம்பெற்ற அவர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பிலும் விசாரணையாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது அமைப்புகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளும் விசாரணையின் கீழ் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், ரிஸ்வான் அல்லது இமாம் ஆகிய இருவரும் எந்தவொரு தவறிலும் ஈடுபட்டதாக இதுவரை பாகிஸ்தானின் தேசிய சைபர் குற்ற விசாரணை பிரிவு எந்தவொரு உத்தியோகபூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை.
விசாரணையின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில்களை வழங்குவதற்கு மேலதிக கால அவகாசத்தை இரு வீரர்களும் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தனியாக உள்நாட்டு ஒழுக்காற்று விசாரணையொன்றை ஆரம்பித்துள்ள பின்னணியிலும் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விதிமுறைகளுக்கு அமைவாக விசாரணை நடத்தப்படுவதாக சபை தெரிவித்துள்ளதுடன், விசாரணை நடைபெற்று வருவதால் மேலதிக கருத்துகளை தெரிவிக்க மறுத்துள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ரிஸ்வான் மற்றும் இமாம் உள்ளிட்ட ஏழு வீரர்கள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 194 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கு முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியிலும் அந்த அணி மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. இதன் பின்னர் சுற்றுப்பயண அணியிலும் பயிற்சியாளர் குழுவிலும் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










