பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் GSP+ வர்த்தக சலுகைகள் தொடர்ந்து கிடைப்பது உறுதியானது அல்ல என பாகிஸ்தானுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் ரெய்முண்டாஸ் கரோப்லிஸ் எச்சரித்துள்ளார்.
தற்போதைய GSP+ திட்டம் 2026ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய திட்டத்தில் இணைவதற்கு பாகிஸ்தான் கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளை செயல்படுத்துவதில் முன்னேற்றத்தை பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் GSP+ சலுகைகள் 2014ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளன. இதன் மூலம் அந்நாட்டின் ஏற்றுமதிகளில் 85 சதவீதத்துக்கும் அதிகமானவை, குறிப்பாக ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்கள், ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் சுங்கவரி மற்றும் ஒதுக்கீடு இன்றி நுழைகின்றன.
இந்த சலுகைகளை இழந்தால், ஐரோப்பிய சந்தையில் பாகிஸ்தானின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையின் போட்டித்திறன் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.











