இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அம்பர் எச்சரிக்கை செப்டம்பர் 15 அதிகாலை 3 மணி முதல் செப்டம்பர் 16 காலை 8.30 மணி வரை அமுலில் இருக்கும்.
மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சுற்றியுள்ள கீழ்மட்ட வளிமண்டலத் தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, சில பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கம்பஹா கிரிந்திவெலையில் உள்ள செலத்தலராமய பகுதியில் 146.5 மி.மீ., களுத்துறை ஹல்வத்துர எஸ்டேட்டில் 123.5 மி.மீ. மற்றும் காலி குருதியபொத்த தேயிலை தொழிற்சாலையில் 117 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளது.









