இலங்கையின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமேல் மாகாணத்திலும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே, வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கத்திற்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வானிலை முன்னறிவிப்பு இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.










