மட்டு ஏறாவூரில் 22 கஜமுத்துடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது
மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலச்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலேசாசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலாக குழுவினர் சம்பவதினமான இன்று காலை 11.00 மணியளவில் ஏறாவூர் பிரதேசத்தில் வீதி ஒன்றில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த நபர் தடைசெய்யப்பட்ட யானை தந்தத்தின் பாகமான 4 கஜமுத்துக்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபட்டபோது அங்கு மாறு வேடத்தில் இருந்த பொலிசார் சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர்.
இதனையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கஜமுத்துக்களை விற்பனை செய்த அம்பாறை சாய்ந்தமருதைச் சேர்ந்த 57 வயதுடைய கட்டிட ஒப்பந்தகார் ஒருவரை 18 கஜமுத்துக்களுடன் ஏறாவூரில் வைத்து மாலை 5.00 மணிக்கு கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூரைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும் , இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும் இவர்கள் இருவரையும் தொடர்ந்து விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.