பலஸ்தீனத்திற்கு மேலும் 125 மில்லியன் நோர்வே குரோன்கள், அதாவது சுமார் 13.17 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி ஊடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதுடன், பலஸ்தீனத்தின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வரவு-செலவுத் திட்ட ஆதரவும் இதில் உள்ளடங்குகிறது.
காஸாவில் உணவு, சுத்தமான குடிநீர், மின்சாரம் மற்றும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் தொடர்ந்து மிகவும் குறைவாக உள்ள நிலையில், சர்வதேச ஆதரவுக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் எய்டே தெரிவித்துள்ளார். காஸாவின் ஆரம்பகட்ட மீள்கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2026ஆம் ஆண்டில் இதுவரை பலஸ்தீனத்திற்கு சுமார் ஒரு பில்லியன் நோர்வே குரோன்கள் நிதியுதவியை நோர்வே வழங்கியுள்ளது. பலஸ்தீனத்திற்கான சர்வதேச நன்கொடையாளர் குழுவான AHLC-க்கு நோர்வே தலைமை வகித்து வருவதுடன், பலஸ்தீன அரச நிறுவனங்களையும் பொருளாதார வளர்ச்சியையும் ஆதரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.









