பற்கள் பாதுகாப்பு

பற்கள் பாதுகாப்பு

பற்கள் பாதுகாப்பு

😁😁😁மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.

பற்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
  1. சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பாக்டீரியாக்கள் பெருகும் இடங்கள். எனவே, ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
  2. காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
  3. பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில், அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும். மேற்புற ஈறுகளை மேலே இருந்து கீழாகவும், கீழ்ப்புற ஈறுகளை கீழே இருந்து மேலாகவும் விரலால் அழுத்தித் தேய்த்தால், ஈறுகள் பற்களுடன் வலுவாக இணைந்திருக்கும். உணவுத் துகள்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் தங்காது. பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகள் குறையும். துர்நாற்றமும் ஏற்படாது. ஈறுகளில் வீக்கமும் ரத்தக் கசிவும் ஏற்படாமல் பற்கள் பாதுகாக்கப்படும்.
  4. கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவை பற்சிதைவைத் தூண்டும் காரணிகள். இவற்றின் விஷயத்தில் கவனமாக இருந்தால், பற்சிதைவுக்கான வாய்ப்புகள் குறையும்.
  5. பற்சிதைவு ஆரம்பத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி போலப் பல்லின் மேற்பரப்பில் தோன்றும். இந்த நிலையிலேயே பல் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால் மேற்கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாதுகாக்கலாம்.
  6.  பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.
  7.  பால்புட்டியில் பால் அருந்தியவுடன் குழந்தைகள் அப்படியே தூங்கிவிடும். இந்தச் சமயத்தில், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் பாலுடன் வினை புரிந்து அமிலம் உருவாகி, பால் பற்கள் பாதிக்கப்படும். எனவே, குழந்தை பால் குடித்த பிறகு சிறிது தண்ணீரைக் குடிக்கச் செய்வது அவசியம்.
  8. புகையிலை மற்றும் மதுப் பழக்கம் ஈறுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால், அவற்றைத் தவிர்ப்பது பல் பாதுகாப்புக்கு உதவும்.
  9. தண்ணீர் நிறைய பருகுவதும் அவசியமானது. வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உமிழ்நீர் அவசியம். இது உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும் பற்சிதைவில் இருந்து பாதுகாக்கும் தாதுக்களும் நீரில் உள்ளன.
  10. பிரஷில் உள்ள இழைகள், பூ காம்புகளைப் போன்று வளைய ஆரம்பித்தால், உடனே பிரஷை மாற்றிவிட வேண்டும். பொதுவாக, இந்த இழைகள் 60 நாட்களில் வளைய ஆரம்பிக்கும். எனவே, 60 முதல் 90 நாட்களுக்கு ஒரு முறை பிரஷை மாற்றுவது நல்லது.

பற்கள் பாதுகாப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்