பயணிகள் பேருந்துகளுக்கு கடுமையாக்கப்படும் சட்டம்: வெளியானது அறிவிப்பு
அனைத்து பயணிகள் பேருந்துகளுக்கும் ஓகஸ்ட முதலாம் திகதி முதல் மின்னணு டிக்கெட்டுகளை வழங்குவது கட்டாயமாகும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் இன்று புதன் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட் பெறுவது கட்டாயமாக இருந்தாலும்இ சட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
தனியார் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் இல்லாமல் விதிக்கப்படும் அதே தொகையை அபராதமாக விதிக்க தேவையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அதே தொகையை அபராதமாக விதிக்க தேவையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்துகளுக்குத் தேவையான மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்றும், அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் கார்களின் பின் இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜூலை 1 ஆம் திகதி முதல் பேருந்துகளில் உள்ள தேவையற்ற அலங்காரங்களும் அகற்றப்படும் என்றும் அமைச்சர் பிமல் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.