பயங்கரவாத தடைச்சட்டம் – நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

 

நாட்டில் எந்த தேர்தல் நடாத்தப்பட்டாலும் தற்போது பதவியில் இருக்கும் அத்தனை நபர்களும் படுதோல்வி அடைவார்கள் என்று அறிந்ததாலேயே இன்னும் தேர்தல்கள் நடாத்தப்படாமல் இருக்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் – நிகழ்நிலை காப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள சிவில் சமுகம், மனித உரிமைகள் ஏற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை சென்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அலிசாஹிர் மௌலானாமேலும் தெரிவிக்ககையில்,

மனசாட்சி உள்ள அனைவருமே பயங்கரவாத தடைச்சட்டம் – நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்றும் தான் முழுமையாக இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலை நடத்தாமலேயே பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பான்மையை பெற்று தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க எண்ணுகிறார். அதற்காக தான் இந்த சட்டமூலத்தை இரவோடு இரவாக பாராளுமன்றத்தில் சமர்பித்து அதனை அமுலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.

நிகழ்நிலை காப்பு சட்டமானது முழுமையாக அவர்களை காப்பதற்காக உருவாக்கப்பட்டதே என்று கருத்து தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த சிவில் சமுக செயற்பாட்டாளர் புகாரி  “தாங்கள் சிறுபான்மை சமுகம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து பிரஜை சார்பாக நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தினை முழுமையாக எதிர்க்கின்றோம். இது தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜரையும் கையளித்துள்ளோம்.

மேலும் இன்று நாங்கள் நடாத்தவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸ் நிலையம் மற்றும் மாநகரசபையிடம் காந்தி பூங்காவை இன்று எங்களுக்க பயன்படுத்தவும் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தவும் அனுமதி கோரி அது கிடைத்திருந்த நிலையில் இன்று காலை தங்களுக்கு கொழும்பிலிருந்து அழைப்பு வந்ததாகவும் காலை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் இல்லை என்றால் இதில் கலந்து கொள்ளும் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என பொலிஸாரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொது மக்கள், சிவில் சமுக ஏற்பாட்டாளர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்