பதுளை – செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதி நிதியில் கிண்ணியா குறிஞ்சாக்கேனி பாலம் நிர்மாணிக்கப்படும்

-திருகோணமலை நிருபர்-

பதுளை – செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதியான சவுதி நிதியின் மூலம் கிண்ணியா குறிஞ்சாக்கேனி பாலம் நிர்மாணிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்

இப்பால நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு  பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் வழங்கிய பதில்களும் பின்வருமாறு

 

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேசத்தின் குறிஞ்சாக்கேணிப் பால மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பபிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இப்பால நிர்மாணபணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்ன?

இந்த பால நிர்மாணிப்புக்கான ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீ. வீ கருணாரத்ன எண்ட் கம்பெனிக்கு வழங்கப்பட்டதுடன் அதன் நிர்மாணிப்பு பணிகள் மந்தநிலையில் காணப்பட்டன. இதற்கு அப்போது காணப்பட்ட கோவிட் நிலைமை மட்டுமன்றி எதிர்பார்க்காதவாறு கணுக்களுக்கான செலவு அதிகரித்தமை, நிர்மாணிப்பு மூலப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு அத்துடன் உரிய கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான தாமதம் காரணங்களாக அமைந்தன. இந்த மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு உரிய ஒப்பந்தத்திற்குள்முகாமைப் படுத்திக் கொள்வதற்கு கடினமாக இருந்தமையால் அரசுக்கு ஏற்படும் நிதிசார் நட்டத்தை குறைத்துக் கொள்வதற்கு உரிய ஒப்பந்தத்தை இரு தரப்பு இணக்கப்பாட்டுடன் (mutual termination) நிறைவு செய்யப்பட்டது

இப்பால நிர்மாணப்பணிகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது நிறைவு செய்யப்படும்.

இதற்கமைவாக பால நிர்மாணிப்பு பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை கவனத்தில் எடுத்துக் கொண்டு செலவுகளை குறைத்துக் கொண்டு பாலத்தை மீள நிர்மாணிப்பதற்கு தேவையான டெண்டருக்கான ஆவணங்கள் தயார்படுத்தப்படுகின்றன. மே மாத ஆரம்பத்தில் இதற்கான டெண்டர் கோருவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன் இரண்டு மாதத்திற்குள் நிர்மாணிப்பு பணிகளை ஆரம்பித்து ஒன்றரை வருடங்களுக்குள் நிர்மானிப்புப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்காக மீண்டும் Estimate செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா? அல்லது ஏற்கனவே செய்யப்பட்ட Estimate இல் தற்போதைய விலைவாசிக்கேற்ப விலைகள் மட்டும் மாற்றம் செய்யப்படுமா?

பால நிர்மாணிப்பு பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு மாற்றுத்திட்டத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு தற்போது காணப்படுகின்ற விலைகளுக்கு ஏற்ப ஆரம்ப மதிப்பீடுகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் மீள் நிர்மாணப்பணிகளுக்காக உள்நாட்டு நிதி பயன்படுத்தப்படுமா? அல்லது ஏதாவது வெளிநாட்டு நிதி உதவிகள் பெறப்படுமா?

இந்த நிர்மாணிப்புக்காக சவுதி நிதியத்தின் (SFD) கீழ் மேற்கொள்ளப்பட்ட பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டத்தில் மீதியான நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

வெளிநாட்டு உதவி எனின் எந்த நாட்டில் இருந்து எவ்வளவு நிதி உதவி?

பதுளை – செங்கலடி வீதி மேம்படுத்தல் கருத்துட்டத்தின் மீதியான சவுதி நிதி.

மாற்று பாதை இல்லாமல் இந்த பாலம் நிர்மாணிக்கப்படும்போது படகு பாதை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பற்ற பயணத்தின் போது ஏற்பட்ட விபத்தின் போது பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்