
-நுவரெலியா நிருபர்-
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி இன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு மற்றுமொரு நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு இரண்டு நோயாளர்களையும் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த விபத்து இன்று காலை 11:00 மணியளவில் ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள நோர்வூட் வென்சர் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நோயாளர் காவு வண்டிக்கு எதிர் திசையில் வந்த லொறி ஒன்றின் முன் சக்கரம், நோயாளர் காவு வண்டியின் பின் சக்கரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது . விபத்தில் நோயாளர் காவு வண்டியின் பின் சக்கரமும், லொறியில் முன் சக்கரமும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.