காலி தேசிய வைத்தியசாலைக்கு நோயாளிகளை அழைத்து வந்தவர்களுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டிகளை திருடி, அவற்றை வேறு பகுதிகளில் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மூன்று முச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 41 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், மஹா இந்துருவ மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிகளையே சந்தேகநபர்கள் இலக்கு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட வாகனங்களின் நிறங்கள் மற்றும் சில பாகங்களை மாற்றியமைத்து, அவற்றை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









