நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றமும் பங்களித்திருக்கலாம் என புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
World Weather Attribution(உலக வானிலை மாற்றக் காரணங்களை ஆராயும் அமைப்பு)-அமைப்பின் ஆய்வின்படி, அதிகரித்து வரும் வெப்பநிலை, பனிப்பாறைகள் உருகி மெலிதல், நிரந்தரமாக உறைந்திருந்த நிலப்பகுதிகள் (permafrost) உருகுதல் மற்றும் ஏற்கனவே இருந்த புவியியல் பலவீனங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பேரழிவை தீவிரப்படுத்தியிருக்கலாம். இப்பகுதியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத வெப்பநிலை மனிதச் செயல்பாடுகளால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக சுமார் 1.5°C அதிகமாக இருந்ததாக ஆய்வு கூறுகிறது.
நேபாளத்தின் லாங்டாங் லிருங் மலைப்பகுதிக்கு அருகே பாறைகள் மற்றும் பனிப்பாறைத் தொகுதி சரிந்து பள்ளத்தாக்கை நோக்கி வேகமாக நகர்ந்ததே வெள்ளத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அந்தச் சரிவு ஏற்பட்டபோது உருவான அதிர்வு ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், அப்பகுதியில் பனிப்பாறைகள் ஆண்டுக்கு சுமார் அரை மீட்டர் அளவுக்கு மெலிந்து வருவது சரிவுகளின் நிலைத்தன்மையை பாதித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பேரழிவில் சுமார் 1,400 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 5,179 இலிருந்து 6,150 ஆக அதிகரித்துள்ளதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், காலநிலை மாற்றம் மட்டுமே இந்தப் பேரழிவுக்கான காரணம் அல்ல என்றும், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளிட்ட புவியியல் காரணிகளும் இப்பகுதியை பலவீனப்படுத்தியிருக்கலாம் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆய்வு இன்னும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட (peer-reviewed) அறிவியல் இதழில் வெளியாகவில்லை என்றாலும், அதன் ஆய்வு முறை ஏற்கனவே சக மதிப்பாய்வு செய்யப்பட்ட முறைகளை அடிப்படையாகக் கொண்டதாக World Weather Attribution தெரிவித்துள்ளது.









