நுவரெலியா ஸ்ரீநகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய தேர் திருவிழா

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா, ஹாவாஎலிய, ஸ்ரீநகர் அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது .

நுவரெலியாவில் வரலாற்று சிறப்பு மிக்க ஹாவாஎலிய, ஸ்ரீநகர் அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தேரில் அரோகரா கோஷங்களுடன் நுவரெலியா பிரதான நகர் முழுவதும் வெளிவீதி உலா வந்து இன்று திங்கட்கிழமை தேர் இருப்பிடத்தை சென்றடைந்தது.

திருவிழா கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக பூஜைகள் இடம்பெற்று வருகின்றது.

இதில் கடந்த சனிக்கிழமை பாற்குட பவனி நடைபெற்று , 1008 சங்காபிஷேகத்தை தொடர்ந்து பிற்பகல் மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை தீ மிதிப்பை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க தேவார பாராயணங்கள் ஒலிக்க விநாயகப் பெருமான், முருகப் பெருமான், ஸ்ரீ கருமாரியம்மன், சோமாஸ்கந்த மூர்த்தி, சண்டேஸ்வரர் ஆகிய ஐந்து தெய்வங்களின் சிலைகள் தேரில் ஏற்றப்பட்டு வெளி வீதியூடாக நுவரெலியா பிரதான நகரம் முழுவதும் பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் உலா வந்தனர் .

இதன்போது பக்தர்களால் காவடி எடுக்கப்பட்டு ,பறவை காவடி,கற்பூர சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை தீர்த்த உற்சவமும் கரகம் வீதி உலா என்பன நடைபெற்று கொடி இறக்கத்துடன் விழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.