நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு நீதிமன்றம் அழைப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தமக்கு பிணை வழங்குவதற்கான நீதவான் உத்தரவு தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக முறைப்பாட்டாளர் ஹிஷாம் ஜமால்டீன் தெரிவித்துள்ளார்.

இது தற்போது நடைபெற்று வரும் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், பொது மக்கள் மனதில் நீதி பரிபாலனம் தொடர்பாக சந்தேகங்களை ஏற்படுத்துவதற்கும் சமமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனக் கூறப்பட்டு, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்