நீதிமன்றத்துக்கு முன்னால் வைத்து சினிமா பாணியில் கடத்தல் : மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை, நீதிமன்ற வாசலில் வைத்து சினிமா பாணியில் கடத்திச் சென்ற சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் உட்பட குழுவாக அங்கு வந்த சிலர், நீதிமன்றிலிருந்து வெளியே வந்த பெண்ணை, வாயை பொத்தி இழுத்துச் சென்று, ஆட்டோவில் ஏற்றிய போது, அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு, பெண்ணை கடத்திச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வசித்து வரும் 27 வயது பெண் ஒருவர், 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
எனினும், இருவரும் இந்த திருமண விடயத்தை வீட்டாரிடம் மறைத்து, இருவருமே தத்தமது வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களது பதிவு திருமணம் பற்றி பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது, அதன் பின் குறித்த காதலன் வெளிநாடு சென்றுள்ளார்.
வெளிநாடு சென்ற காதலன், தீய பழக்கத்தில் ஈடுபட்டிருப்பதாக காதலிக்கு தெரியவந்ததையடுத்து, அவருடன் வாழமுடியாது என விவாகரத்து கோரி, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துள்ளார்.
வெளிநாடு சென்றுள்ள காதலனுக்கு பதிலாக அவரது சகோதரி நீதிமன்றில் ஆஜராகி, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து காதலன் திரும்ப நாட்டுக்கு வந்து, வழக்கிற்கு நீதிமன்றில் ஆஜராகி 3 தவணைக்கு சென்று வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.
சம்பவதினமான கடந்த செவ்வாய்க்கிழமை, குறித்த வழக்கு விசாரணைக்கு காதலி அவரது சகோதரி மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார்
அதேவேளை, காதலன் அவரது சகோதரி மற்றும் ஒரு குழுவினருடன் சென்றுள்ளார்
நீதிமன்ற பகுதியில் இருவரது உறவினர்களும் வெளியில் காத்து நின்றபோது, நீதிமன்றத்துக்குள் காதலியும், காதலனும் சென்று, வழக்கு விசாரணையின் பின்னர் அங்கிருந்து திரும்பி வெளியே வந்தனர்.
அவர்கள் வெளியே வந்து வீதிக்கு வரும் போது, அங்கு வைத்து காதலனின் சகோதரி திடீரென தனது சகோதரனின் காதலியின் வாயை பொத்திக் பிடிக்க, காதலன் அவளை இழுத்து சென்று ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்
இதனை அங்கிருந்த காதலியின் உறவினர் ஒருவர் கண்டு ,உடனடியாக ஆட்டோ மீது பாய்ந்து தங்களது பெண்ணை காப்பாற்ற முற்பட்டபோது, ஆட்டோ அவரை சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்து சென்று, அங்கு தள்ளி விட்டு, இந்திய தமிழ் சினிமா பாணியில் குறித்த காதலியை, காதலனும் அவரது சகோதரியும் கடத்தி சென்றுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணின் சகோதரி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
