நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பு நடவடிக்கை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்து, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
மார்ச் 20 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, வியாபாரிகள் செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்கும் நோக்கில் பொருட்களை மறைப்பது, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பது மற்றும் காலாவதியான அல்லது தரம் குறைந்த பொருட்களை வழங்குவது ஆகியவற்றைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது, என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், எரிவாயு மற்றும் எரிபொருளின் தொடர்ச்சியான விநியோகத்தையும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், விதிமீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை பதிவு செய்யலாம், என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
