“நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும்
-யாழ் நிருபர்-
யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் “நிஜமும் நிழலும்” இதழ் வெளியீட்டு விழாவும், ஊடகக் கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவித்து, அவர்கள் பாரம்பரிய மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இறை வணக்கம் இசைக்கப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வரவேற்பு நடனம், தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.
அதன்பின்னர் “நிஜமும் நிழலும்” இதழின் முதற் பிரதியை பாடசாலையின் பதில் அதிபர் திருமதி வதனி தில்லைச்செல்வன் வெளியிட்டு வைக்க அதனை பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் பெற்றுக்கொண்டார்.
இதழ் வெளியீட்டு நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் ஊடக கண்காட்சி ஆரம்பமானது. கண்காட்சி கூடத்தை பிரதம விருந்தினர் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
அதன்பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஊடகக் கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் பதில் அதிபர் திருமதி வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட பீடாதிபதி எஸ்.ரகுராம் பிரதம அதிதியாகவும், வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி. பிரேமலொஜி சுதேஷ்குமார் சிறப்பு அதிதியாகவும், சிரேஷ்ட பத்திரிகையாளர் தர்மினி பத்மநாதன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்ததுடன், இதில் ஊடகத்துறை ஆசிரியர் திரு.அனுராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.