நாவல் பழம் பறிக்க சென்ற சிறுவன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில்

-திருகோணமலை நிருபர்-

மூதூர் நண்பர்களுடன் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் நேற்று சனிக்கிழமை மாலை மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.சகான் (வயது 14) தனது நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்துள்ளார்.

காயங்களுக்குள்ளான குறித்த சிறுவன் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் இடுப்பு எலும்பு முறிவுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாவல் பழத்திற்கான பருவகாலம் என்பதால் பெற்றோர்கள் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுவது அவசியம். அத்துடன் பல கிராமங்களை சேர்ந்த குடும்பங்கள் பருவத்தில் காய்க்கும் கனிகளை நம்பியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றார்கள் என்பதும் இதன் விற்பனையில் சிறுவர்கள் ஈடுபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.