
நாமல்வத்தை கிராமத்துக்குள் புகுந்த யானை
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை – நாமல்வத்தை கிராமத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்ததால் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை கிராம மக்கள் வீட்டுத் தோட்டம், விவசாயம் போன்றவற்றை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த கிராமத்தை சுற்றி யானை மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் யானைகள் மாலை 6.00 மணிக்கே கிராமத்துக்குள் உட்புகுந்து வீட்டுத் தோட்டங்கள், தென்னை மரங்கள், வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதேவேளை யானையை விரட்டுவதற்காக முற்படுகின்ற போது வெளிச்சத்தை நோக்கி யானை துரத்தி வந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு யானை அட்டகாசம் செய்யும் போது தொலைபேசி அழைப்பு விடுத்தாலும் கூட உரிய நேரத்தில் வருகை தருவதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தனர்.
ஆகவே யானையின் அட்டகாசத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாமல்வத்தை கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

