நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு “தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு” – ஜனாதிபதி அழைப்பு

“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் இன்று வெள்ளிக்கிழமை நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

1.நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவித்தல்.

2.குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில்       எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

3.உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல்.

4.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல்

காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட  பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதனையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மக்களின் நோக்கங்களையும் நிறைவேற்றி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த முடியும் என்பதனையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது தமது எதிர்பார்ப்பாகும் என்பதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் அவர்கள் இன்று இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.

“நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும்” என்பதனையும சம்பந்தன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதன் பின்னர் அதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுதல்,

வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இன்று அவதானம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ , அமைச்சர்களான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், சமல் ராஜபக்க்ஷ, அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், எம். ஏ. சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் ராஜபுத்திரன், தவராஜா கலையரசன், எஸ். வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172