நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரனின் தங்கையின் திருமணம் : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சக வீரர்கள்

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லி கிராமத்தில் ஆராதனா என்ற அந்த பெண்ணின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.

அருணாச்சல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியில் இருந்த ஆராதனாவின் அண்ணன் ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.

இந்நிலையில் அண்ணன் இன்றி ஆராதனா திருமணம் நடக்கக்கூடாது என்று கருதிய ஆஷிஷ் குமார் பணியாற்றிய படைப்பிரிவில் உடன் பணியாற்றிய வீரர்கள் அருணாச்சல பிரதேசம் புறப்பட்டனர்.

ஆராதனாவுக்கு அண்ணனாக முன்னின்று அவர்கள் அனைத்துக் கடமைகளையும் செய்தனர்.

மணமகனை திருமண மேடைக்கு அழைத்துச் செல்வது, சடங்குகள் முடியும் வரை அருகில் நிற்பது, பின்னர் புகுந்த வீட்டுக்குச் செல்லும் போதும் கூடச் செல்வது வரை, பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.

சகோதரனின் பாசத்தையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் விதமாக, வீரர்கள் ஆராதனாவிற்கு திருமணப் பரிசாக நிலையான வைப்புத் தொகை இருப்பை வழங்கினர்.

வீரர்களின் இந்த செயல், திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதுபற்றி வீரர்களிடம் கேட்கையில், ஆராதனாவிற்கு அண்ணனாக நின்று ஆஷிஷின் நினைவைப் போற்றுவது எங்களது தார்மீகக் கடமை என்று பதிலளித்தனர்.