
நவராத்திரி பற்றிய பேச்சு
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம்.
மகா சங்கார காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.
🔶விரதகாலம்
புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றதுஜமேற்கோள் தேவைஸ. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.
🔶வரலாறு
💥நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன்இ ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது.
💥முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கணம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் துன்பப்பட்டனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை.
இப்படியே போனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.
மக்களின் துன்பம் கண்டு அவளும் மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை ஆனார்கள். அதேபோல இந்திரனும் அஷ்டதிக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள்.
அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
இவ்வாறு பல வரலாறுகள் காணப்படுகின்றன.
🔅நவராத்திரி விரத நியதிகள்
✔புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.
✔வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
✔தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.
இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.
