கனடாவின் நயகரா ஆற்றைச் சுற்றியுள்ள ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிவடைந்துள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மறுசுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகள் ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தப்பட்டு, நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கை வாழ்விடங்கள் உருவாக்கப்படுகின்றன. நயகரா பூங்காக்கள் நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் இணைந்து இதுவரை 1.64 கிலோமீற்றர் நீளத்திற்கு இத்தகைய வாழ்விடங்களை உருவாக்கியுள்ளன.
மேலும், 2025ஆம் ஆண்டு கோடை காலத்தில் பிளாக் கிரீக் மற்றும் பொயர்ஸ் கிரீக் ஆகிய ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளில் மரக் கட்டமைப்புகள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தி கூடுதலாக 240 மீற்றர் ஈரநிலப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் அப்பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் மேம்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன், அழிந்துவரும் நீர்வாழ் உயிரினங்களுக்கான வாழ்விடங்களை மீண்டும் உருவாக்குவதிலும் இந்தத் திட்டம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.











