போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சாரா கலீஃபா மற்றும் மேலும் 11 பேருக்கு தூக்கிலிட்டு மரண தண்டனை விதித்து எகிப்திய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு போதைப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்த குற்றவியல் வலையமைப்பின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டியது.
39 வயதான கலீஃபா, குற்றச்செயல்கள் தொடர்பான விடயங்களை மையமாகக் கொண்ட “Mission Impossible” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் அறியப்பட்டவர்.
கலீஃபா தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
விசாரணையின்போது, 750 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களும், போதைப்பொருள் தயாரிப்புக்காக பயன்படுத்தப்பட இருந்த மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அரசுக்குச் சொந்தமான “Al-Ahram” செய்தித்தாளின் தகவலின்படி, 20 சாட்சிகளின் வாக்குமூலங்களையும், உரையாடல்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களையும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
மரண தண்டனைகள் முதலில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், அவற்றை உறுதிப்படுத்துவதற்கு முன் எகிப்தின் கிராண்ட் முஃப்தியின் தேவையான மதரீதியான கருத்தைப் பெற வேண்டியிருந்தது. எகிப்திய சட்டத்தின்படி, மரண தண்டனை விதிக்கும் முன் நீதிமன்றங்கள் கிராண்ட் முஃப்தியின் கருத்தைக் கோர வேண்டும்.
முந்தைய நீதிமன்ற விசாரணையின்போது, போதைப்பொருட்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலீஃபா மறுத்ததாகக் கூறப்படுகிறது. போதைப்பொருட்களை தாம் முதன்முதலில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் அலுவலகத்தில் அவற்றுடன் புகைப்படம் எடுக்கப்பட்டபோதுதான் பார்த்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்தத் தீர்ப்பை கலீஃபா மேல்முறையீடு செய்ய முடியும்.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் எகிப்திய நீதிமன்றங்கள் 492 மரண தண்டனைகளை விதித்துள்ளன. அதே ஆண்டில் 23 மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.










