
(செய்தி ஆசிரியர் – மின்னல்24செய்திகள்)
கடந்த 8 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தற்பொழுது மலையகத்தில் ஹட்டன் நகரில் பொங்கல் விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
விழாக்களும் கொண்டாட்டங்களும் ஒவ்வொரு இனத்தவரின் மதத்தவரின் பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்களை பறைசாற்றுகின்றவையாகவே இருக்கின்றன. மனித வாழ்வியலோடு ஒன்றிணைந்தவை தான் இந்த விழாக்களும் கொண்டாட்டங்களும்.
இவ்வாறான ஒரு நிலையில் இலங்கையில் தமிழ் சமூகத்தினரிடையே பேசுபொருளாக மாறியிருக்கின்றது இரண்டு பொங்கல் விழாக்கள்
திருகோணமலையில் கடந்த 6.7.8 ஆகிய மூன்று தினங்களும் மாபெரும் பொங்கல் விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் இடம்பெற்றது. இந்த பொங்கல் விழாவில் இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக ஜல்லிக்கட்டு இடம்பெற்றது. இந்த விடயத்தை பெரும்பாலான மக்கள் பெருமையோடு கிழக்கு மாகாண ஆளுநரின் சாதனையாகவும் பார்த்தனர்
இதுவரை கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வாறான ஒரு தமிழ்கலாச்சார நிகழ்வை நடாத்தியதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை கிழக்கு மாகாணத்தின் முதல் தமிழ் ஆளுநர் செந்தில் தொண்டமான் என்பதும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விடயமே.
எனினும் இந்த பொங்கல் விழா தொடர்பாக அதிருப்தி அநேகமான மக்களிடையே இருந்தது. அதற்கு முதலாவது காரணம் குறித்த பொங்கல் விழா தை மாதம் பிறக்கும் முதலே மார்கழியில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற கருத்து. கிழக்கு ஆளுநரின் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திகதி பலரிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருந்தது என்று சொல்லலாம்.
இதேவேளை கிழக்கில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலம் . கிழக்குஆளுநர் செந்தில் தொண்டமான் ஆளுநராக பதவியேற்ற நிலையில் அவரும் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் எவ்வித முனைப்பும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்நிலையில் கிழக்கில் ஒருபுறம் மாடுகள் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொருபுறம் மாடுகளை வைத்து கிழக்கு ஆளுநர் ஜல்லிக்கட்டு நடாத்தியது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியது.
இதேவேளை கிழக்கு ஆளுநர் மட்டக்களப்பு நகரில் திறப்புவிழா ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது ‘மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது இதற்கு காரணம் மருந்துகள் தட்டுப்பாடா?’ என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ‘மனிதராக பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாள் இறக்கதான் வேண்டும்’ என்று பதிலளித்திருந்தார் என்ற விடயமும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும் ஆளுநர் செந்தில் தொண்டமான் கிழக்கு ஆளுநராக பதவியேற்ற பின் கிழக்கு மாகாணத்தில் கிடப்பில் கிடந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செய்திருக்கிறார் என்ற விடயமும் இங்கு சொல்லிக்கொள்ள வேண்டிய ஒன்றே.
இவ்வாறான நிலையில் ஒரு தரப்பினர் ஆளுநர் செந்தில் தொண்டமானின் பொங்கல் விழாவை முழமையாக பாராட்டி ஆதரித்தனர்.
இது இவ்வாறு இருக்க கிழக்கு தொண்டமான் குடும்ப வாரிசுளிடையே போட்டி என்பது போல் நீங்கள் மட்டுமா பொங்கல் விழா நடாத்துவீர்கள் நாங்களும் நடத்தி காட்டுகிறோம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தென்னிந்திய நடிகைகளை அழைத்து ஹட்டன் நகரில் மாபெரும் பொங்கல் விழாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடத்தினார்.
குறித்த நடிகைகளை அழைத்து செலவு செய்த பணத்தை மலையக மக்களின் வாழ்வாதாரத்தில் செலவழித்திருக்கலாம் என்ற ஒரு விமர்சனம் இங்கு எழுந்துள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகை ஒருவர் ஜீவன் தொண்டமான் மலையக பெண்களுக்கு நிறை வரப்பிரசாதங்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
பாவம் அந்த நடிகைக்கு தெரியாது , மலையகத்தில் எத்தனை சிறுமிகள் கல்வியை தொடரமுடியாமல் பாடசாலை கல்வியை இடைநிறுத்துகிறார்கள். எத்தனை சிறுமிகள் சிறு வயதிலேயே குடும்ப சுமையால் வேலைக்கு சென்று அங்கு பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்நோக்குகிறார்கள் என்று.
மேலும், “இப்படியொரு அழகான துடிப்பான இளைஞன் அமைச்சராக கிடைத்தது மலையக மக்களுக்கு கிடைத்த பாக்கியம்” என்றும் குறித்த நடிகையை தன்னுடைய உரையில் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்தது போல் மலையகம் அப்படியொரு பாக்கியத்தை பெற்றிருக்க வேண்டியது தான் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பும். ஆனால் ஜீவன் தொண்டமான் அந்த புகழ்ச்சிக்கு தகுதியானவரா என்பதை மலையக மக்களே சொல்ல வேண்டும்
ஹட்டனில் இடம்பெற்ற பொங்கல் விழாவை பலர் விமர்சித்த போதும் சிலர் அதை ஏற்றுக்கொண்டனர். கிழக்கில் பொங்கல் விழா செய்யும் போது நாங்கள் ஏன் மலையகத்தில் பொங்கல் விழா செய்யக்கூடாது என்ற எண்ணமே இந்த ஆதரவிற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பதை அவதானிக்ககூடியதாக இருக்கிறது.
ஜீவன் தொண்டமானும், செந்தில் தொண்டமானும் குடும்ப அரசியலை மலையகத்தில் நிலைநிறுத்த முனைகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கின்றது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களது பதவிகளை வைத்து, பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தரவேண்டும் என்பதே கிழக்கு மக்களினதும், மலையக மக்களினதும் எதிர்பார்ப்பு.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
