
தைப் பொங்கல் தினமான கடந்த வியாழக்கிழமை, 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, சந்தேகத்தின் பேரில் 35 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியும், சந்தேக நபரும் நாவலப்பிட்டியில் உள்ள வெஸ்ட்வேர்ல்ட் தோட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள், தைப் பொங்கல் தினமான கடந்த வியாழக்கிழமை மதியம், குடிபோதையில் இருந்த சந்தேக நபர், சிறுமியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் அழைத்துச் சென்று, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து பின்னர் சிறுமிமை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.
நீண்ட நேரம் வீட்டில் இல்லாத சிறுமிமை, பெற்றோர், தோட்டத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தேடியுள்ளனர்.
இறுதியில், தோட்ட வீட்டின் மேலிருந்து, சிறுமி அழும் சத்தம் கேட்டதும், உறவினர்கள் சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு காணாமல் போயிருந்த சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டில் உள்ளவர்கள் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சிறுமி சந்தேக நபரின் பெயரை வெளிப்படுத்தி, நடந்த விபரங்கள் கூறியுள்ளார்.
இதன் பின்னர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில்,சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்
தொடர்ந்து சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறுவர் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கம்பளை பிரிவுக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எச்.எம்.டி. ஹேரத்தின் மேற்பார்வையின் கீழ், நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.எம். குலதுங்க தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
