தேசிய ரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு
இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கனிஷ்ட தேசிய கூடைப்பந்தாட்ட (பிரிவு- 2 ) சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினரைக் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பாடுமீன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கூடைப் பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஜெயன் பார்த்தசாரதி தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இயேசு சபைத்துறவி வணக்கத்திற்குரிய அருட்தந்தை போல் சற்குணநாயகமும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் டி.சி. ரொசாரியோ, பொருளாளர் எஸ்.சுதாகர், உபதலைவர் எம்.பரணிதாசன், நிர்வாகசபை உறுப்பினர் சுரேஷ் ரொபட், மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கே. ராஜேந்திரா, செயலாளர் கே.ஜே. பிரியேந்திரன், அணி பயிற்றுவிப்பாளர் ஏ.விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் எஸ். ஜெயன் பார்த்தசாரதி,
அணி வீரர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும் பாராட்டியதுடன், 1996′ ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அணியொன்று தேசிய ரீதியில் வெற்றி பெற்றுள்ளது என்பதையும், தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சம்மேளனம் சிரமங்களுக்கு மத்தியில் இயங்குவதாகவும், நிதிப்பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக உள்ளது. இருப்பினும் மாவட்ட கூடைப்பந்தாட்டத் துறையை இன்னும் முன்னேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட தமது குழாம் தயாராக இருக்கிறது.
மேலும் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்துக்குரிய மைதானம்இ அலுவலகம் ஆகியவற்றின் தேவைப்பாட்டையும் சுட்டிக்காட்டினார்.
பிரதம விருந்தினர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் உரையாற்றுகையில்,
மாவட்டத்தின் கூடைப்பந்தாட்டப் பாரம்பரியத்தை எடுத்தியம்பியதுடன், கூடைப்பந்தாட்டம் மட்டக்களப்பின் அடையாளமாகும். அத்தோடு முன்னைநாள் இயேசுசபைத் துறவிகளான வண.ஹேவர்ட், வண. வெபர் ஆகியோரின் அர்ப்பணிப்புளையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், வளர்ந்து வரும் வீரர்கள் மேலும் பயிற்சிகளை அதிகரிப்பதுடன், அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பல வெற்றிகளை குவித்து மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்