தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் அரசுக்குச் சொந்தமான கப்பலொன்றுடன் சீன கடலோர காவல் படையின் கப்பல் மோதியுள்ளதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. செப்டெம்பர் 18ஆம் திகதி பலாவான் மாகாணத்திலிருந்து சுமார் 54 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் மீன்பிடி மற்றும் நீர்வளப் பணியகத்துக்குச் சொந்தமான BRP Datu Magat Salamat என்ற கப்பல், பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு எரிபொருள் மற்றும் உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீன கடலோர காவல் கப்பல் தொடர்ச்சியாக ஆபத்தான முறையில் கப்பலின் பாதையை குறுக்கிட்டதாகவும், பின்னர் மோதியதாகவும் பிலிப்பைன்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் பிலிப்பைன்ஸ் கப்பலின் கைப்பிடிகள், உலோகத் தாங்கிகள் மற்றும் மேற்பகுதி கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. எனினும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் மாறுபட்ட விளக்கங்களை வழங்கியுள்ளனர். சீன கப்பல் வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் கப்பல் சீன கப்பலின் முன்பகுதியை நோக்கி திடீரென பாதையை மாற்றி வேகமாகச் சென்றதே மோதலுக்குக் காரணம் என சீன கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த தமது கப்பலுடன் இவ்வாறு மோதுவதற்கு எந்த நியாயமும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்த்து கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு சீனாவிடம் பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது.
தென் சீனக் கடலில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கடல்சார் உரிமை மற்றும் பிராந்தியக் கட்டுப்பாடு தொடர்பான பதற்றத்தின் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மைய காலங்களில் இரு நாடுகளின் கப்பல்கள் இடையே மோதல் மற்றும் ஆபத்தான கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.









