தென்னாப்பிரிக்காவில் செயலிழந்துள்ள இரண்டு அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் இயக்குவதற்கு 8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடு தேவைப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர். எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் நாட்டின் சார்பைக் குறைப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அரசுக்கு சொந்தமான Central Energy Fund (CEF) நிறுவனம், வெள்ளத்தால் சேதமடைந்த Durban-இல் உள்ள SAPREF சுத்திகரிப்பு நிலையத்தை 2024ஆம் ஆண்டு BP மற்றும் Shell நிறுவனங்களிடமிருந்து வெறும் 1 ஆண்டுக்கு கையகப்படுத்தியது. ஆரம்பத்தில் 180,000 பீப்பாய்கள் தினசரி சுத்திகரிப்பு திறன் கொண்டிருந்த இந்த நிலையத்தை, எதிர்காலத்தில் 400,000 முதல் 650,000 பீப்பாய்கள் தினசரி சுத்திகரிப்பு திறன் கொண்ட நிலையமாக மேம்படுத்த CEF திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீடு மட்டும் சுமார் 7.15 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2020ஆம் ஆண்டு முதல் செயலிழந்துள்ள Mossel Bay gas-to-liquids சுத்திகரிப்பு நிலையத்தையும் கட்டம் கட்டமாக மீள இயக்குவதற்கான திட்டத்தை CEF பரிசீலித்து வருகிறது. முதல் கட்டத்தில் தினசரி சுமார் 18,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக 5.8 பில்லியன் ராண்ட் முதலீடு தேவைப்படும். இரண்டாவது கட்டத்தில் உற்பத்தியை 46,000 பீப்பாய்களாக அதிகரிக்க மேலும் 8.5 பில்லியன் ராண்ட் தேவைப்படும்.
இந்த முதலீட்டுக்கு தேவையான நிதியைப் பெறுவதற்காக ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையிலான வர்த்தக வங்கியான Afreximbank உள்ளிட்ட நிதி நிறுவனங்களுடன் ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டம் முன்னெடுக்கப்பட்டால், உள்நாட்டு எரிபொருள் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதி மீதான அழுத்தத்தைக் குறைப்பது தென்னாப்பிரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.









