துருக்கி அதிகாரிகள் நாடு முழுவதும் LGBTQ+ அமைப்புகள், செயற்பாட்டாளர்களின் வீடுகள் மற்றும் சில இரவு விடுதிகளில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு, டஜன் கணக்கானவர்களை கைது செய்துள்ளனர். இஸ்தான்புல், அங்காரா, இஸ்மிர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
“என் குடும்பம் பாதுகாப்பாக உள்ளது(My Family is Safe)” என பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில், 15 மாகாணங்களில் 162 சந்தேகநபர்கள், 9 அமைப்புகள் மற்றும் 13 நிறுவனங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக துருக்கி நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குடும்ப விழுமியங்களைப் பாதுகாப்பதே நடவடிக்கையின் நோக்கம் எனக் கூறியுள்ளனர்.
இதனிடையே, மனித உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கையை LGBTQ+ சமூகத்துக்கு எதிரான அரசால் முன்னெடுக்கப்படும் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை எனக் கண்டித்துள்ளன. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துருக்கி தொடர்பான அறிக்கையாளர் நாச்சோ சான்செஸ் அமோர், இது அடிப்படை உரிமைகள் மீதான “அதிர்ச்சியூட்டும் அளவிலான ஒடுக்குமுறை” என விமர்சித்துள்ளார்.









