திரைப்பட விமர்சகர் லக்மின ரணசிங்க மீது தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில், நடிகர் ஹேமால் ரணசிங்க நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மத்தியஸ்த சபையின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை ஹேமால் ரணசிங்கவை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
எட்டப்பட்ட சமரசத்தின் அடிப்படையில், திரைப்பட விமர்சகர் லக்மின ரணசிங்க மீது தாக்குதல் நடத்தியமைக்கான பொறுப்பை ஹேமால் ரணசிங்க ஏற்றுக்கொண்டு, அவரிடம் மன்னிப்புக் கோருவதற்கு இணங்கியுள்ளார்.
அதேவேளை, ஹேமால் ரணசிங்கவை மன்னிக்க லக்மின ரணசிங்கவும் சம்மதித்துள்ளார்.
மேலும், குறித்த சமரசத்தின் கீழ், திரைப்பட விமர்சகர் லக்மின ரணசிங்கவை ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக அவமதிக்கவோ, அவதூறு செய்யவோ அல்லது வேறு எந்த வகையிலும் இழிவுபடுத்தும் கருத்துகளை வெளியிடவோ கூடாது என, ஹேமால் ரணசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், லக்மின ரணசிங்கவுக்கு 500,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை செலுத்தவும் அவர் இணங்கியுள்ளார்.
எனினும், லக்மின ரணசிங்க சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பதிரண, சமரச ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் இருந்தபோதிலும், திரைப்பட விமர்சகர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவமதிப்பு மற்றும் அவதூறான கருத்துகளுக்கு உள்ளாகி வருவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
மேலும், 500,000 ரூபா இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டமை தொடர்பிலும் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.










