கட்டு வலையிலிருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை -உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, “எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்காதீர்கள்”, “கட்டுவலையில் களவு செய்யாதீர்கள்”, “கட்டுவலைகளை சேதமாக்காதீர்கள்”, “எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதே” போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்
திருகோணமலை -அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்பாட்டத்தில் ஏனைய மீனவ வங்கங்களும் இணைந்து கொண்டு தங்களது ஆதரவையும் வழங்கியிருந்தார்கள்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளரிடம் கையளித்தனர்.
குறித்த மீனவர் சங்கத்தின்கீழ் 56 இடங்களில் கட்டு வலை மீன்பிடி இடம்பெறுகிறது, மேற்படி கட்டுவலையில் இருந்து மீன்களை சிலர் திருடுகின்றனர், கணவாய் மீன்களைப் பிடிப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் விசேட தூண்டில்களால் கட்டு வலைகள் சேதமடைகின்றன, வலைகள் சேதமடைவதால் கூட்டில் இருக்கும் மீன்கள் வெளியேறி விடுகின்றன, இதனால் வலைகள் சேதமடைவதுடன் இதனால் மீன்கள் வெளியேறுவதனால் வருமானம் முழுவதும் இழக்கப்படுகிறது.
1935 ஆம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக கட்டுவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தமது வாழ்வாதாரத்தை அரசாங்கம் பாதுகாத்து திருட்டில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.