திருகோணமலையில் அதிகரிக்கும் டெங்கு நோய் : 6 வயது குழந்தை பலி
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பிரதேசத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், பொது மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென்றும் சுகாதாரப்பிரிவினர்க்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டு மென்றும் கிழக்கு மாகாண தொற்று நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். அருள்குமரன் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த மாதம் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 600 மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், சித்திரை மாதமளவில் கிழமைக்கு 25 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக திருகோணமலை நகரத்தை அண்டிய பகுதிகளில் 325 நோயாளர்கள் சித்திரை மாதமளவில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவத்தார்.
உப்புவெளிப் பிரதேசத்தில் டெங்கு நோயால் 6 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
திருகோணமலை பிரதேசத்தில் இந்நோயின் தாக்கம், குறிப்பாக திருகோணமலை நகரப்பகுதி, உப்புவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நன்நீரில் மட்டுமே உற்பத்தியாகும் திறன் கொண்ட டெங்கு நுளம்பின் பெருக்கத்தை தடுக்கவேண்டுமாயின் நன்னீரை பயன்படுத்தும் பொது மக்கள் தேக்கி வைக்காமல் அடிக்கடி மாற்றம் செய்து, தேங்கி நிற்கக்கூடிய கொள்கலன்கள் பாத்திரங்களை அழித்து பெருக்கத்தை தடுக்க முயற்சி செய்யவேண்டுமென்றும், இந்நோயின் தாக்கத்துக்கு ஆளாகிய வெளியூர் நபர்கள் உள் நுழைவதாலும் மற்றும் படையினர் வெளியூர்களுக்கு போய்வருவதாலும் இந்நோய்க்கு ஆளாக்கப்படும் நிலையில் உள்ளுர் வாசிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இவ்விடயத்தில் பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.