வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சரின் அழைப்பின் பேரில் நாளை (14) முதல் 16ஆம் திகதி வரை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, தாய்லாந்தின் தொழிலாளர் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பதில் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களைக் கொண்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் தாய்லாந்தில் இலங்கை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான ஒப்பந்தம் (MoA) ஆகியவற்றில் கைச்சாத்திடுவதன் மூலம் தொழிலாளர் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இந்த விஜயத்தின் மூலம் சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு, குடியேற்றம் மற்றும் தொழிலாளர் நகர்வு ஆகிய துறைகளில் நடைமுறை ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், இலங்கை – தாய்லாந்து இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.










