தாய்மார்கள் வெளிநாடு செல்லதடை: புதிய சட்டம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை நாட்டிற்குள் விட்டு தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கவும், பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

ஸ்திரமான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

முன்னதாக குழந்தைகளின் வயது வரம்பு இரண்டு ஆண்டுகள் கழிந்தால் தாய்மார்கள் வெளிநாடு செல்லலாம் என்றிருந்த நிலையில் தற்போது ஐந்தாக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகளை விட்டுவிட்டு தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏழாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் மற்றும் பெண்கள் நீதிமன்றில் ஆஜராகும்போது அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக வீடியோ தொழில்நுட்பம் மூலம் அவர்களை தொடர்பு கொள்ளவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்