தந்தை கண் முன் மகனை வேட்டையாடிய சுறா!
எகிப்தில், ரஷ்ய நாட்டவர் ஒருவர் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது, அவரது தந்தையின் கண் முன்னே கொடிய சுறா ஒன்றிற்கு பலியாகியுள்ளார்.
விளாடிமிர் போபோவ் (வயது – 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம், எகிப்திலுள்ள ஹர்கதா என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரைக்கு தன் தந்தையுடன் வந்திருந்த விளாடிமிர் என்னும் இளைஞர் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது, புலிச்சுறா ஒன்று அவரைத் தாக்கியுள்ளது. விளாடிமிர், தன் தந்தையின் கண் முன்னே கொடூரமாக கொல்லப்பட, ஒன்றும் செய்ய இயலாமல் அழுது கதறியபடி தன் மகன் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார் அவரது தந்தை.
பின்னர் அந்த சுறா பிடிக்கப்பட்டு அறிவியலாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள். ஆய்வின்போது, சுறாவின் வயிற்றுக்குள் விளாடிமிரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷ்ய கடல் உயிரியலாளரான டிமிட்ரி ஓர்லோவ் அந்த சுறா குறித்து தெரிவிக்கையில் “கடந்த கோடையின்போதும் இரண்டு பேரை ஒரு புலிச்சுறா கொன்றுள்ளது. அப்போது அந்தச் சுறா கருவுற்றிருந்துள்ளது. இப்போதும் அந்தச் சுறா கருவுற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, அந்தச் சுறா கருவுற்றிருப்பதால், அதனால் வேகமாக நீந்தி மீன்களை வேட்டையாடி உண்ணமுடியவில்லை. எனவே அது கடந்த ஆண்டு எளிதாக உணவு கிடைத்த, அதாவது, மனிதர்களை வேட்டையாடிய அதே இடத்துக்கு வந்துள்ளது.
இம்முறை அந்த இடத்தில் நீந்திக்கொண்டிருந்த விளாடிமிர் அதன் பசிக்கு இரையாகிவிட்டார்” என்கிறார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்