
தந்தையின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்ட மகன்கள்
-கிரான் நிருபர்-
மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சந்திவெளி, வட்டையார் வீதியைச் சேர்ந்த கந்தையா பவானந்தன் (43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் வழமையாக சந்திவெளி ஆற்றில் இரவு வேளைகளில் தோணியில் சென்று மீன்பிடித்து அதிகாலையில் கரைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டவர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மீன்பிடிக்கச்சென்ற இவர், மறுநாள் காலை உரிய நேரத்துக்கு கரை திரும்பாததால் இவரது ஆண் மக்கள் இருவர் தோணியொன்றில் சென்று தேடிய போது, ஆற்றில் தந்தையின் சடலத்தை கண்டுள்ளனர்.
பிள்ளைகள் இருவருமாக தந்தையின் சடலத்தை கரைக்குச் கொண்டு வந்த பின் சந்திவெளி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்ல பொலிஸாரைப் பணித்தார்.
உயிரிழந்தவர் தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டதால் அதிலிருந்து மீள முடியாமல் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

