தவறான தகவல்களை அமைச்சரும் அதிகாரிகளும் பரப்புவதாக தபால் ஊழியர் குற்றச்சாட்டு!

உடலில் அரைவாசி பகுதிக்கு தைக்காத ஆடை அணிந்தபடி தபால் ஊழியர் ஒருவர், தற்போது இடம்பெற்றுவரும் வரும் தபால் வேலைநிறுத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு தவறான தகவல்களை தபால் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்குவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தங்களுக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க கோரியே, இந்த பணிப்பகிஸ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த தபால் ஊழியர் தெரிவிக்கையில்,

எங்கள் சீருடை கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம், மிதிவண்டிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுள்ளோம், ஊழியர்களின் ஒப்பந்தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம், ஆனால் அவர்கள் கைரேகை மற்றும் கூடுதல் நேரம் பற்றி பேசுகிறார்கள், என்று அவர் கூறினார்.

சீருடை தைக்க  600 ரூபா வழங்கப்படுகிறது, மிதிவண்டிகளுக்கு 250 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது, இவை போதுமானதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தபால் தொழிற்சங்கங்கள் நடத்தும் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் குறித்து அதிகாரிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாக, அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.