
ட்ரம்பின் மகனின் தோழியை தாக்கிய ரஷ்ய இளைஞருக்கு சிறை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய மகனான பாரன் ட்ரம்ப், லண்டனில் வசிக்கும் தனது தோழி ஒருவர் தாக்கப்படுவதை காணொளி அழைப்பு (Video Call) மூலம் நேரில் கண்டு பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து, தாக்குதல் நடத்திய ரஷ்ய இளைஞருக்கு லண்டன் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேட்வி ருமியன்ட்சேவ் (Matvei Rumiantsev) என்ற இளைஞர், பாரன் ட்ரம்ப்பின் தோழியைத் தாக்கியது மற்றும் சிறையிலிருந்து அவருக்குக் கடிதம் எழுதி முறைப்பாட்டை திரும்பப் பெறுமாறு மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காகத் தலா இரண்டு ஆண்டுகள் என மொத்தம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி அமெரிக்காவிலிருந்து காணொளி அழைப்பு மேற்கொண்ட 20 வயதான பாரன் ட்ரம்ப், தனது தோழி தாக்கப்படுவதைக் கண்டு உடனடியாக பிரித்தானிய பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
“நான் அமெரிக்காவிலிருந்து அழைக்கிறேன், ஒரு பெண் தாக்கப்படுகிறார்” என அவர் அவசர அழைப்பின் போது தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது, பாரன் ட்ரம்ப்புடனான அந்தப் பெண்ணின் நட்பைக் கண்டு பொறாமைப்பட்டதாலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ருமியன்ட்சேவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜூரிகள் ருமியன்ட்சேவை உடல் ரீதியான தாக்குதல் மற்றும் நீதியைத் திசைதிருப்ப முயன்ற குற்றங்களில் குற்றவாளி என அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
