அமெரிக்காவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் வேட்பாளர்களான மைக் ரோஜர்ஸ் மற்றும் ஆஷ்லி ஹின்சன், ஈரானுடனான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரியுள்ளனர். இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஈரான் போர் தொடர்பான நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் விலகி வருவதற்கான சமீபத்திய அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
மிச்சிகனில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சயாத்தை எதிர்கொள்ளும் மைக் ரோஜர்ஸ், போர் விரைவில் முடிவடைந்தால் எரிசக்தி செலவுகள் குறையும் எனத் தெரிவித்துள்ளார். அதுவரை குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க பெட்ரோல் மீதான மாநில மற்றும் மத்திய வரிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அதேவேளை, அயோவா மாநிலத்தில் செனட் பதவிக்கு போட்டியிடும் ஆஷ்லி ஹின்சன், ஈரான் போருக்கான செலவுகளால் அமெரிக்கர்கள், குறிப்பாக அயோவா மக்கள் பாதிக்கப்படக் கூடாது எனக் கூறியுள்ளார். போரை “வெற்றிகரமாகவும் உடனடியாகவும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, ஈரானில் இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கான ட்ரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நாடாளுமன்ற முயற்சிகளுக்கு எதிராக ஹின்சன் பலமுறை வாக்களித்திருந்தார்.
இந்த மாற்றம், நவம்பர் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக ஈரான் போரின் பொருளாதார தாக்கங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து குடியரசுக் கட்சி வேட்பாளர்களிடையே அதிகரித்து வரும் கவலையை வெளிப்படுத்துவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.









