
டிட்வா சூறாவளி நிவாரணம்: இந்தியப் பிரதமருக்கு காவிந்த ஜயவர்தன நன்றி
சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (ஊலஉடழநெ னுவைறயா) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, இந்தியா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இந்தியாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இன்று (5) கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு விஜயம் செய்த அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான நன்றிக் கடிதத்தை அதிகாரிகளிடம் கையளித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியா வழங்கிய அவசரகால நிவாரணப் பொருட்கள், பேரிடர் மீட்பு ஒருங்கிணைப்பு மற்றும் தளவாட உதவிகளை அவர் பாராட்டியுள்ளார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்கு, அனர்த்தத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே முதன்முதலில் கரம் கொடுத்த நாடு இந்தியா என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள தூதரக அதிகாரிகள் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்த விதத்தையும் கடிதத்தில் பாராட்டியுள்ளார்.
அத்துடன் டிட்வா சூறாவளி உதவி மட்டுமன்றி, 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியையும் காவிந்த ஜயவர்தன நினைவு கூர்ந்துள்ளார்.
