இலங்கை மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள் கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
“Turning Digital Assets into Growth Engines” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் தலைமையில் Westminster House-இல் நடைபெற்றது. இலங்கையின் சில்லறை வர்த்தகம், வங்கித்துறை, தொலைத்தொடர்பு, விருந்தோம்பல் மற்றும் அரச துறைகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இங்கிலாந்தின் டிஜிட்டல் தயாரிப்பு ஆலோசனை நிறுவனமான Apadmi, பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 2025ஆம் ஆண்டு கொழும்பில் தனது அலுவலகத்தை நிறுவிய பின்னர், இலங்கையில் Apadmi ஏற்பாடு செய்த முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. இலங்கை–இங்கிலாந்து வர்த்தக மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நிகழ்வில் Keells Supermarkets நிறுவனத்தின் Omni Commerce, Digital and Loyalty பிரிவின் தலைவர் நீரேஷ் முத்துரத்னானந்தன், Keells Nexus செயலி மற்றும் 29 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அதன் விசுவாசத் திட்டத்தின் நவீனமயமாக்கல் தொடர்பில் உரையாற்றினார். இதனூடாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வர்த்தக வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் நடைமுறை அனுபவங்கள் பகிரப்பட்டன.
மேலும், HSBC Sri Lanka and Maldives நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு, PickMe, Hatton National Bank மற்றும் Apadmi ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற குழு கலந்துரையாடலும் நடைபெற்றது. இலங்கையில் அதிகரித்து வரும் மொபைல் தொழில்நுட்பப் பயன்பாட்டை வாடிக்கையாளர் விசுவாசம், புதிய வருமான வாய்ப்புகள் மற்றும் நிறுவனங்களின் செயற்பாட்டுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது.
2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் மொபைல் தரவுப் பயன்பாடு 1.03 மில்லியன் டெராபைட்டாக பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத அதிகரிப்பாகும். நாட்டில் 29.4 மில்லியன் மொபைல் சந்தாக்கள் உள்ள நிலையில், பயன்படுத்தப்படும் சாதனங்களில் 71 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லெட்கள் என தெரிவிக்கப்பட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியை இலங்கையின் வர்த்தகத் துறை எவ்வாறு பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற முடியும் என்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் டிஜிட்டல் புதுமைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கருத்துகள் பரிமாறப்பட்டன.









