கடவத்த, வபட பகுதியில் 8 துப்பாக்கிகள், 534 துப்பாக்கி ரவைகள் மற்றும் 2 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வாடகை வீடொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 8 துப்பாக்கிகள், பல்வேறு வகையான 534 உயிருள்ள ரவைகள் மற்றும் இரண்டு ஜோடி கைவிலங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட நபர் கொல்லப்பட்ட சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாதின் சகோதரர் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், டான் பிரியசாத் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்ட நபரின் தந்தை முக்கிய சந்தேகநபராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபரொருவரின் அறிவுறுத்தலின்படி துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை சேமித்து வைத்து, அவர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பல்வேறு நபர்களிடம் அவற்றை விநியோகித்து வந்ததாக சந்தேகநபர் விசாரணைகளின்போது தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.









