ஜேர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU), மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமெரானியா மாநிலத் தேர்தலில் வரலாறு காணாத பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அந்த முடிவை “பேரழிவு” என மெர்ஸ் தெரிவித்துள்ளார். எனினும், கட்சித் தலைவர் மற்றும் ஜேர்மன் அதிபர் பதவிகளில் தொடர்ந்து செயற்படப் போவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மாநிலத் தேர்தல் முடிவுகளின்படி, வலதுசாரி AfD கட்சி சுமார் 38.3 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளதுடன், ஆளும் கூட்டணியின் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 35.4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மெர்ஸின் CDU வெறும் 4.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் 5 சதவீத நாடாளுமன்ற நுழைவு வரம்பைக் கூட அந்தக் கட்சி எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பெர்லின் மாநிலத் தேர்தலிலும் CDU சுமார் 19 சதவீத வாக்குகளுடன் பின்னடைவைச் சந்தித்துள்ளது. Die Linke கட்சி சுமார் 25.3 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தல் முடிவுகள் மெர்ஸின் தலைமையின் மீது கட்சிக்குள் நிலவி வந்த அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளன.
எனினும், தேர்தல் பின்னடைவுகளுக்கு மத்தியிலும் பொருளாதாரம், ஓய்வூதியம், வரி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக மெர்ஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் தேவைப்படுவது உறுதியும் பொறுமையும் எனக் குறிப்பிட்ட அவர், ஜேர்மன் அதிபராகவும் CDU தலைவராகவும் தனது பொறுப்பைத் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.









